Archive for the ‘என்.எஸ்.கே’ Category

இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள், அதில் காமெடியே இல்லை, காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை!

நவம்பர் 5, 2013

இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள், அதில் காமெடியே இல்லை, காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.

சினிமா, நகைச்சுவை, அரசியல், ஆபாசம்: தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் அரசியலும், சினிமாவும், ஆபாசமும் பின்னிப் பிணைதுள்ள விவகாரங்கள் ஆகும். அதைப் பொறுத்த வரைக்கும் பெரியார், அண்ணாதுரை, கருணாநிதி போன்றோர் அதிக அளவில் தங்களது பங்கைக் கொடுத்திருக்கிறார்கள், வழிகாட்டியும் உள்ளார்கள். இவ்வாறு திராவிடமாயையில் உழன்று வந்த நிலையில் இப்பொழுது வடிவேலு என்ற நகைச்சுவை நடிகர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். “சினிமாவில் தற்போது வரும் காமெடிகளை மனைவி மற்றும் குழந்தைகளோடு சேர்ந்து உட்கார்ந்து பார்க்க முடியவில்லை, அந்தளவுக்கு காமெடி என்ற பெயரில் கெட்ட விஷயங்களை சொல்கிறார்கள்”, என வடிவேலு கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக திகழ்ந்தவர் வடிவேலு. அரசியல் ரீதியாக சென்றதால் இரண்டு ஆண்டுகள் சினிமாவில் வாய்ப்பு இன்றி இருந்தார். அதாவது நகைச்சுவை அரசியல் ஆனதா, அல்லது அரசியல் நகைச்சுவை ஆனதா என்று ஆராய வேண்டியுள்ளது. பிரச்சாரத்தின்போது சக நடிகரும், அரசியல் கட்சி தலைவருமான ஒருவரை காய்ச்சு, காய்ச்சு என்று காய்ச்சி எடுத்தார்[1]. தேர்தல் முடிந்த பிறகு வடிவேலுவுக்கு பிரச்சனைகள் வந்தன. தற்போது மீண்டும் ஒரு புது உத்வேகத்துடன் நடிக்க தொடங்கியுள்ளார் வடிவேலு. விரைவில் இவர் இரண்டு வேடத்தில் ஹீரோவாக நடித்துள்ள ஜகஜ்ஜால புஜபல தொனாலிராமன் படம் வெளியாக இருக்கிறது.

இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள்: இந்நிலையில் தற்போது வரும் காமெடி சீன்களை பற்றி கடுமையாக சாடியுள்ளார் வடிவேலு. அவர் கூறியுள்ளதாவது, “நான் சினிமாவில் இல்லாத காலகட்டத்தில் நிறைய காமெடி நடிகர்கள் வந்துவிட்டார்கள். [இங்கு அது சந்தானம் தான் என்று சில ஊடகங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன] காமெடி யார் செய்தாலும் அதை ரசிக்கலாம். நானும் சில படங்களை பார்த்தேன். ஆனால் அதில் காமெடியே இல்லை, எனக்கு சிரிப்பும் வரவில்லை. மாறாக இப்போது வரும் காமெடிகளில் கெட்ட விஷயங்களை நிறைய காட்டுகிறார்கள். மனைவி, குழந்தை என குடும்பத்தோடு சேர்ந்து காமெடி சீன்களை பார்க்க முடியவில்லை. இதுபோன்ற காட்சிகளை பார்க்கும்போது மன அழுத்தம் தான் வருகிறது. அதனால் இதுபோன்ற காமெடி காட்சிகளை பார்த்து கண்ணையும், மனதையும் கெடுத்து கொள்ளாதீர்கள்”, என்று கூறியுள்ளார். இதில் நிச்சயமாக உண்மை உள்ளது. ஆனால், இவரது நகைச்சுவையில் அவ்வாறு இருந்ததா-இல்லையா என்பது தெரியவில்லை, ஏனெனில், நான் அதிகமாக சினிமா பார்ப்பவன் அல்ல. [ஆனால் இப்பொழுது டிவியில் வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்].

பிறழ்ந்த, சீர்கெட்ட, உருமாறிப் போன நகைச்சுவை: என்.எஸ்.கிருஷ்ணன், சந்திரபாபு, டி.என்.ராமச்சந்திரன், பாலையா, நாகேஷ், என்று பலர் இருந்த காலத்தில் நகைச்சுவை, “நகை”ச்சுவையாகவும், நகைச்”சுவை”யாகவுமே இருந்தன.   ஆனால், பிறகு ஆபாசம், அசிங்கம், கேவலம், ஊழல், என்று தரங்கெட்டு விட்டது. ஏதோ நகைச்சுவை இருக்கவேண்டும், நகைச்சுவை நடிகர்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் வரம்புகளை மீறினர். புளூபிலிம் காட்டமுடியாதலால், அவர்களில் ஊத்த வாய்களினின்று, வசனங்களை விட்டு நாறவைத்தனர். “தமிழ்”, தமிழின் உயிர், உயிரின் மூச்சு, மூச்சின் நாடி, நாடியின் துடிப்பு என்றெல்லாமடுக்கிக் கொண்டு போன பகுத்தறிவுகள், நகைச்சுவை விபசாரத்தில் இறங்கின. ஏதோ மக்களுக்கு மிகச்சிறந்த தத்துவங்களைக் கொடுப்பது போன்று ஆபாசத்தை கொடுத்தனர். போதாகுறைக்கு பல்கலைகழகங்களில் அவர்களுக்கு “டாக்டர்” பட்டங்கல், அரசியல் பரிந்துரையால் “பத்மஶ்ரீ” போன்றவை எல்லாம் வழங்கப்பட்டன. முன்பு நகைச்சுவை, தமாஷ், ஜோக், துணுக்கு, என்பன பற்றி அலசியிருந்த காரணிகள் இதற்கும் பொருந்தும்[2].

திராவிடத்தால் வீழ்ந்தோம்: அப்பொழுதும் திராவிடத்தின் தாக்கம் இருந்தாலும், அவை வசனங்களில் பாடல்களில் ஆதிக்கத்தைக் கொண்டிருந்தன. திரைப்படங்கள் குறிப்பிட்ட சித்தாந்தம் அல்லது அரசியல் கட்சி சார்புடையதாக இருக்கும் போது, அவ்வாறே நடிகர்கள் வசனம் பேசும்படி பணிக்கப்பட்டனர் அல்லது பணியில் உள்ளவர் வசனம் எழுதிக் கொடுத்து தமது தொழிலை வளர்த்தனர்.  தங்களது விசுவாசத்தை தத்தமது சித்தாந்த மூலங்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.  இன்றும் அவர்களுடைய ஆதிக்கம்-தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்கள் மக்களின் மனங்களை, சிந்தனைகளைக் கட்டுப்படுத்த, ஈர்த்து தம் சித்தாந்தங்களுக்கேற்ப மாற்ற, அவர்களை அம்முறையிலேயே கட்டுக்குள் வைத்திருக்க பற்பல முறைகளைக் கையாண்டனர். அவர்களின் கைதேர்ந்த, தொழிற்நுணுக்கம் மிகுந்த, வியாபார யுக்தி நிறைந்த முறைகள் மற்றவர்களுக்கு வராது.

நகைச்சுவை பெயரில் அரங்கேறியுள்ள ஆபாசம், அசிங்கம், ஊழல், தூஷ்ணங்கள் முதலியன: நகைச்சுவை பெயரில் பல அத்துமீறல்கள் தாராளமாக நடந்து கொண்டிருக்கின்றன.

  • வயதானவர்களை, பெரியவர்களை உதாசீனப்படுத்துவது, கேவலப்படுத்துவது, மரியாதையில்லாத வார்த்தைகளை உபயோகிப்பது அவர்களை விமர்சிப்பது.
  • கணவன்-மனைவி உறவை தூஷிப்பது, கணவன் எப்பொழுதுமே இன்னொரு பெண்ணை வைத்திருப்பான் அல்லது மனைவி வேறொருவருடன் படுப்பாள் என்பது போல
  • மதம், மதநம்பிக்கைகள், முதலியவற்றை ஏளனம் செய்வது, தூற்றுவது
  • கடவுளர்களையும் கேலியாக சித்தரிப்பது-இது இந்து மதத்திற்கு மட்டும் என்பது ஏனென்று தெரியவில்லை.
  • சடங்குகள், முறைகள் முதலியவற்றை விமர்சிக்கும் போது, குறிப்பிட்ட மதத்தை மட்டும் தாக்குவது
  • போலி சாமியார்கள் என்று வரும் போது, இந்து சாமியார்களை மட்டும் சித்தரிப்பது, தாக்குவது, கேவலப்படுத்துவது
  • மருத்துவர், தாதி, நர்ஸ் போன்றவர்களை, அவர்களது தொழிலை, சேவகத்தை, சேவையை கேவலப்படுத்துவது
  • காசுக்காகக் கற்பழிக்கலாம் என்று பிரச்சாரம் செய்வது
  • போலீசாரை இழிவு படுத்துவது, ஏதோ அவர்கள் தாம் எப்பொழுதுமே லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது போல சித்தரிப்பது
  • சில பெண்களின் தொழிலை, சேவகத்தை விபச்சாரம் என்பது போல சித்தரிப்பது

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். பிறகு, இதுவே ஒரு அசிங்கமான பட்டியலாகி விடும்.

© வேதபிரகாஷ்

05-11-2013