கமல் ஹஸனின் “வெள்ளம்-வெள்ள நிவாரண விமர்சனம்” ஏன் – அரசு தரப்பில் கண்டணம் ஏன்?
கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்: வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு[1] நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரிய நடிகர் என்பதற்காக அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது என்று சாடியுள்ள அமைச்சர், அரசியல் சுயலாபம் பெற முயலும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்ட அறிக்கையில்[2], ”கடந்த 100 ஆண்டு காலம் கண்டிராத கன மழை வெள்ளத்தால் தத்தளித்து தவிக்கின்ற சென்னை மாநகரம் மற்றும் ஏனைய மாவட்ட மக்களைக் காப்பாற்றி, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு எனும் முப்பரிமாணத்தில், போர்க்கால நடவடிக்கை என்பதற்கும் மேலான அவசர கால அடிப்படையில் மழை வெள்ள நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்[3].
1918-ம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற கனமழை பெய்யவில்லை. ஒரே நாளில் 40 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்து, வடகிழக்குப் பருவமழை முழுவதும் பெய்யும் மழையைவிட பலமடங்கு கூடுதலான மழை, ஒருசில நாட்களிலேயே கொட்டித் தீர்த்தது. இதைத் தெரிந்து கொள்ளாமலேயே கமல்ஹாசன் தனது விதண்டவாதக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

Kamal family, it is real
எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன்: இந்த அசாதாரண சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு ஆறுதலாகவும், கடமையே கண்ணாகக் கொண்டு செயல்படும் அரசுக்கு ஆதரவாகவும், உறுதுணையாக இருக்க வேண்டியதை விடுத்து, நடிகர் கமலஹாசன், தன்னிலையும், முன்னிலையும் மறந்து, அரசு நிர்வாகம் செயல் இழந்துவிட்டதாகவும், நிவாரண நிதிக்கு அரசு அவரிடம் பணம் கேட்டது போன்றும், நிவாரணப் பணிகளைச் செய்யத்தானே அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்றும், மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்று தெரியவில்லை என்றும், தனது தகுதி மீறிய, தடுமாற்றமான, தவறான கருத்துக்களை இணையதளம் ஒன்றுக்கு பேட்டியாக அளித்துள்ளதாக 4-12-2015 அன்று ஒரிரு நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது[4]. எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கமலஹாசன், இந்த விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், பிதற்றி இருக்கிறார். கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு, எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அதைத்தான் முதலமைச்சர் தற்போது சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார். இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது ‘அன்பே சிவம்’ திரைப்படத்தை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.”
மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், “போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் அரசு மேற்கொண்டிருக்கும் நிலையில், அரசு நிர்வாகம் செயலற்றுப் போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது என்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களை அவமதிக்கும் செயலாகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கனமழை பெய்த பாதிப்பில் மக்கள் கடுமையாக அவதியுறும் நேரத்தில், அவர்களுக்கு உதவ மனமில்லாமல், எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்று அரசியல் சுயநலத்துடன் செயல்படும் சமுதாயப் புல்லுருவிகளின் கைப்பாவையாக கமல்ஹாசன் மாறிவிட்டார் என்பதையே அவரது வாய்மொழி வெளிக்காட்டுகிறது. மக்களிடம் இருந்து பெறப்பட்ட வரிப்பணம் தமிழக அரசால் தவறாக கையாளப்பட்டது போன்ற ஒரு மாயத்தோற்றத்தினை உருவாக்கி, அரசுக்கு மக்களிடம் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும், அதன்மூலம் அரசியல் சுயலாபம் பெற வேண்டும் என்று முனையும் தீயசக்திக்கு கமல்ஹாசன் விலைபோய்விட்டாரோ என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.”

Gautami, Kamal and Akshara
இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன்: கார்ப்பரேட் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை செலவிட முடிவதாகவும், அந்த பணத்தை நாட்டில் உள்ள 120 கோடி மக்களுக்கும் ஏன் பிரித்துக் கொடுக்கக்கூடாது என்றும் கமலஹாசன் அறிவுஜீவி போன்று ஒரு வினா எழுப்பியுள்ளார். இந்த வினாவை அவர் மத்திய அரசைப் பார்த்து எழுப்பியுள்ளார் போலும்! அதை ஏன் இப்போது கேட்கிறார் என்று புரியவில்லை[5]. மத்திய அரசின் மீது அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை, சினிமாத் துறையின் மீது மத்திய அரசு விதித்த சேவை வரி தள்ளுபடி செய்யப்படவில்லை என்கிற கோபமோ, என்னவோ! அந்தக் கோபத்தை தமிழ்நாட்டின் மீது காட்டி, தமிழக மக்களை குழப்ப வேண்டாம் என்று அவரை நான் கேட்டுக்கொள்கிறேன். கமலஹாசன் தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் கொட்டி எடுத்ததாகச் சொல்லும் ஒரு திரைப்படம் வெளியிடப்படுவதில் அடுக்கடுக்கான சிக்கல்களை அவர் சந்தித்த நேரத்தில் சுய லாபத்திற்காக, தமிழ்நாட்டை விட்டும், இந்தியாவை விட்டும் வெளியேறி விடுவேன் என்று சொன்னவர்தான் கமலஹாசன். அப்போது, அந்தப் பிரச்சனையை தீர்த்துவைத்த முதலமைச்சருக்கு நன்றி கூறியதை மறந்துவிட்டு, தற்போது அவர் பேட்டி அளித்திருக்கிறார்[6]. இதேபோன்றுதான், அவர் சமீபத்தில் ஒரு விளம்பரப் படத்தில் நடித்ததற்காக கிடைத்த பல கோடி ரூபாயை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம், அவ்வாறு எந்த உதவியையும் அவர் வழங்கவில்லை என மறுப்பு வெளியிட்டது[7] என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை: ஓ.பன்னீர்செல்வம் தொடர்கிறார், “வெள்ள நிவாரண நிதியை வழங்குமாறு தனியாருக்கு அரசு எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. மத்திய அரசிடம்தான் நிவாரண உதவி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தாங்களாகவே முன்வந்து நிதியுதவி தருவதுடன், இத்தகைய பேரிடர் ஏற்படும்போது பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப்பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமல்ஹாசன் அறியமாட்டாரா? உதாரணத்துக்கு தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு ரூ.25 லட்சம் வழங்குவதாகத் தெரிவித்து, தனது ட்விட்டர் தளத்தில், இன்று தன்னை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது, தான் 18 வருடங்கள் வாழ்ந்த சென்னை என்றும், சென்னையை தான் நேசிப்பதாகவும் கூறியுள்ளார்[8]. தமிழனின் பண்பாடே, யாரிடமும் யாசிக்காமல் இருப்பதும், தானமாகக் கொடுப்பதை மறுதலிப்பதும்தான். தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு, கமல்ஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. கமல்ஹாசன் பெரிய நடிகர் என்பதற்காகவோ, அவர் பெரிய, பெரிய படங்களை எடுக்கிறார் என்பதற்காகவோ, அவரது பிதற்றல் மொழிகளை கேட்டுக் கொண்டிருக்க முடியாது. இந்த அரசு மீது முழு நம்பிக்கையும், பாசமும் வைத்துள்ள தமிழக மக்கள் அதனை நிச்சயமாக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவோ, நம்பவோ மாட்டார்கள்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்[9].
தமிழகம் 1969, 1985, 1996, 1998, 2005, என்று பலமுறை இத்தகைய புயல், வெள்ளம், வரட்சி முதலியவற்றைச் சந்தித்துள்ளது. சென்னையில் வரட்சி நிலவியபோது, நடு ராத்திரி, விடியற்காலை 2 மணி போன்ற நேரங்களில் தெருக்களில் நின்று, டேங்கர் லாரி எப்பொழுது வரும் என்று காத்திருந்து, நான்கு குடங்கள் தண்ணீர் பிடித்து வாழ்க்கை நடத்தியவர்களைப் பற்றி, இன்று எத்தனை பேருக்குத் தெரியும்? அப்பொழுது கூட தண்ணிர் விநியோகத்தில் பாரபட்சம் இருக்கத்தான் செய்தது. காசிருந்தவர்கள் அப்படியே லாரிகளையே விலை பேசி, தங்களது வீடுகௐளில் நிரப்பிக் கொண்டனர். அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.அப்பொழுதெல்லாம் இப்பொழுதுள்ளவர்கள் பிறந்து கூட இருக்க மாட்டார்கள். மக்கள் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டுதான் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சினிமாவை வைத்து அரசியல் செய்வதும், அரசியலை வைத்து சினிமா செய்வதும், திராவிடப் பாரம்பரியத்தில் வந்துள்ள அனைவருக்குமே கைவந்த கலை. அதிலும், நாத்திகம், பகுத்தறிவு, சமூகநீதி, ஏழை-பணக்காரன், வர்க்க-போராட்டம் போன்றெல்லாம் பேசுகின்றவர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். “பணத்தோட்டம்”[10] போன்றவையெல்லாம் எப்படியிருந்தன என்பது இப்பொழுதுள்ளவர்களுக்குத் தெரியாது.
கஷ்டகாலங்களில் உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது பெயர், முகம் எல்லாம் வரவேண்டும் என்று செய்ததில்லை. உணவு, குடிநீர், துணிமணிகள் என்று கொடுத்து உதவியவர்கள் அமைதியாகத்தான் செய்துள்ளனர். குறிப்பாக இளைஞ்சர்கள், சிறுவர்கள் அபாரமான முறையில் உதவி, சேவைகளை செய்துள்ளார்கள். ஆனால், இப்பொழுதைய வெள்ளத்துயரங்களில், சேவை செய்பவர்களுள் பலர் ஆதாயம் தேட முயன்றுள்ளனர், இன்னும், முயன்று வருகின்றனர். “எப்.எம்” ரேடியோ செனல்களின் அருவருப்பான பேச்சுகளைக் கேட்டிருந்தால், நொந்தே போயிருப்பர். மின்சாரம் இல்லாமல் இருப்பவர்களின் கதியை நினைத்துப் பார்த்தால், அதனின் பலனை அனுபவித்துக் கொண்டு பேசுபவர்கள், வாழ்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
© வேதபிரகாஷ்
09-12-2015
[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=1403164
[2] தமிழ்.இந்து, கமல்ஹாசனுக்கு தமிழக அரசு கண்டிப்பு, Published: December 5, 2015 19:50 ISTUpdated: December 5, 2015 19:51 IST.
[3] மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.
[4] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html
[5] மாலைமலர், தன்னிலை மறந்து பேசுகிறார் கமல் ஹாசன்: அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 05, 9:08 PM IST.
http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html
[6] http://www.maalaimalar.com/2015/12/05210850/minister-Panneerselvam-condemn.html
[7] https://antihidnu.wordpress.com/2015/11/09/kamal-hassan-deepavali-ad-heading-for-controversy/
[8] நிதி வழங்கிய தெலுங்கு நடிகர்கள் விவரம்: அல்லு அர்ஜுன் 25 லட்சம், பிரபாஸ் 15 லட்சம், மகேஷ்பாபு 10 லட்சம், ரவி தேஜா 5 லட்சம்,கல்யாண் ராம் 5 லட்சம், சாய்தரம் தேஜா 3 லட்சம், வருண் தேஜா 3 லட்சம் மற்றும் சம்பூர்ணேஷ் 50 ஆயிரம். தெலுங்கு நடிகர்கள் இதுவரை மொத்தம் 66 லட்சத்து 50 ஆயிரங்களை சென்னை மற்றும் தமிழக மக்களுக்காக அளிக்க முன்வந்திருக்கின்றனர். இது தவிர இன்று மாலை நானி, அல்லரி நரேஷ் உள்ளிட்ட 10 பிரபல நடிகர்கள் பிரபல மால்களில் உண்டியல் ஏந்தி நிதி திரட்டி வருகின்றனர். மேலும் தமிழக மக்களுக்கு உதவ நினைப்போர் ராமாநாயுடு அறக்கட்டளைக்கு தங்களால் முடிந்த தொகைகளை அனுப்பி உதவுமாறு நடிகர் ராணா கேட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றைத் தவிர மக்களுக்குத் தேவைப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நடிகர் நவ்தீப் தலைமையில் திரட்டி சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://tamil.oneindia.com/news/india/chennai-rain-telugu-actors-helps-tamilnadu-people-241616.html
[9]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7952762.ece?ref=relatedNews
[10] அண்ணாதுரையின் கதை, ஆனால், பிறகு அது திமுகவினருக்கே எதிராக போயிற்று. கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியின் புத்தகத்தில் விவரங்களைக் காணலாம்.